×

அன்பை விதைப்போம் அமைதியை (Peace) அறுவடை செய்வோம்!

கிறிஸ்துவம் காட்டும் பாதை

(லூக்கா 2:57-65)

முழுக்கு முனிவர் யோவானின் பிறப்பு சிறப்புத் தன்மை வாய்ந்தது. அவரது தந்தையாகிய செக்காரியா ஆலய குருக்களில் ஒருவராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் எலிசபெத்து. இவர்கள் இருவரும் வயது முதிர்ச்சியடைந்திருந்தனர். அவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லை என்பது பெரும் குறையாக இருந்து வந்தது. செக்காரியா மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை.

அவர் தமக்குக் குழந்தை வேண்டி கடவுளிடம் தொடர்ந்து மன்றாடிவந்தார். அவ்வாறு ஒரு நாள் அவர் தேவாலயத்தில் மன்றாடுகையில் வானதூதர் காபிரியேல் அவர் முன் தோன்றி அவரது மன்றாட்டு கேட்கப் பட்டது என்றும், அவர்களுக்கு ஒரு மகன் பிறப்பாரென்றும் அவருக்கு யோவான் என்று பெயரிட வேண்டும் என்றும் கூறிச் சென்றார். அதன்படி அவர்களுக்குக் குழந்தை பிறந்தது வானதூதர்கூறியபடியே அவருக்கு யோவான் என்று பெயரிட்டனர்.

இளைஞராக வளர்ந்த யோவான் திராட்சை மது அல்லது வேறு மது அருந்தாமலும் எளிய உணவை உண்டும் வாழ்ந்தார். அவர் ஆடை ஒட்டகமயிரினால் ஆனதாக இருந்தது. தோல் கச்சையை இடையில் கட்டி ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வலம் வந்தார். அவருக்கு சமுகத்தைப் பற்றிய விமர்சனப் பார்வையும் அதை வெளிப்படையாகப் பேசும் துணிவும் அவருக்கு இருந்தது. ‘‘மனம்மாறுங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கிவிட்டது’’ எனும் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.

இவரின் இந்த செய்தி பலரையும் கவர்ந்தது எனவே எருசலேம் யூதேயா முழுவதிலுமிருந்து பலர் அவரிடம் வந்து பாவமன்னிப்புக்கென்று திருமுழுக்கு பெற்றனர். இச்சூழலில் இறைமகன் எனப்பட்ட இயேசுவும் சாதாரண மக்களுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு யோவானிடம் திருமுழுக்கு பெற வரிசையில் வந்து நின்று யோவானை வியப்புக்கும் சங்கடத்திற்கும் ஆளாக்கினார். யோவான் இயேசுவுக்குத் திருமுழுக்கு அளிக்கத் தயக்கம் காட்டியபோது இயேசு அவரிடம் ‘‘கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவது தான் முறை’’ என்று கூறி அவரிடம் திருமுழுக்கு பெற்றார்.

மக்களிடையே யோவானின் செல்வாக்கு அதிகரித்து வருவதை ஏரோது கண்டான். இதை நீடிக்க விட்டால் இது வளர்ந்து நாளை தனக்கு எதிரான மக்கட் புரட்சியாக வெடிக்கக் கூடும் என்று அஞ்சி யோவானைக் கைது செய்து சிறையிலடைத்தான். யோவானின் கடுமையான விமர்சனத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஏரோதுவின் மனைவி ஒரு சரியான சந்தர்ப்பத்தில் தனது மகள் மூலமாக யோவானின் தலையை வெகுமதியாகக் கேட்டாள். ஏரோது யோவானைச் சிரைச் சேதம் செய்து அவளது விருப்பத்தை நிறைவேற்றினான்.

ஒரு நேர்மையாளரின் வாழ்க்கை இவ்வாறு ஒரு கொடூர முடிவைச் சந்தித்தது. யோவானின் படுகொலை இயேசுவைப் பெரிதும் பாதித்தது மட்டுமல்ல அது அவரது மனதில் நீங்காத வடுவாக நிலைத்திருந்தது. அவர் தமது திருப்பணியை எவ்விதம் திட்டமிட வேண்டும் என்பதற்கு உதவியது. வீரசாகசம் (Heroic) செய்யும் தனி நபராகக் களமிறங்கி யோவானின் கதியைத் தாமும் சந்தித்துவிடக் கூடாது எனும் மனத் தெளிவு அவருக்கு ஏற்பட்டது. ஆழ்ந்த சிந்தனை திட்டமிடலுக்குப் பின் இயேசு இறையரசு எனும் இலக்கு நோக்கிய மக்களியக்கத்தைத் தொடங்கினார்.

தலைவர்-சீடர் எனும் அமைப்பை ஏற்படுத்திப் பின்னர் அதை விரிவாக்கினார். அவர்களை இருவர் இருவராகக் கிராமங்களுக்கு அனுப்பி கடவுள் அரசு பற்றிய நற்செய்தியைக் கூறி அவ்வியக்கத்தை வலுப்படுத்தினார். ஒரு சமய, சமூக அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார மாற்றத்திற்கு வித்திட்டார். யோவான் அவரது 30 வது வயதிலேயே ஏரோது அரசனால் கொல்லப்பட்டார்.

இயேசுவும் தமது 33 வயதில் சமய, அரசியல் அதிகாரங்களின் கூட்டுச்சதியால் சிலுவைத் தண்டனை எனும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த இருவரும் இவ்வுலகில் மனிதநேயம் தழைத்திட தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்கள். வெறுப்பு அரசியலை ஓரம் கட்டுவோம். உலகெங்கும் அன்பை விதைப்போம் அமைதியை அறுவடை செய்வோம்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post அன்பை விதைப்போம் அமைதியை (Peace) அறுவடை செய்வோம்! appeared first on Dinakaran.

Tags : John the Sage ,Christian ,Zechariah… ,
× RELATED அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்